சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் வழிப்பறி, அடிதடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 31). இவரை, கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வழிப்பறி வழக்குளில் அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், கிச்சிப்பாளையம் பகுதியில் நின்ற சந்தோசை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், களரம்பட்டி வீர வாஞ்சி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் பூபதி (34). இவரை அடிதடி வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று காலை ரஞ்சித் பூபதியை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும், கிச்சிப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வினோத்குமார் (26), எருமாபாளையத்தை சேர்ந்த விஜய் (27) ஆகிய இருவரும் 2023-ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், கிச்சிப்பாளையம் பகுதியில் நின்ற வினோத்குமார், விஜய் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கிச்சிப்பாளையம் பகுதியில் வழிப்பறி, அடிதடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.