சேலம் மாவட்டத்தில் தீ விபத்தை தடுக்க வனப்பகுதியில் 5 டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது
கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.;
கோடைகாலத்தையொட்டி, சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, சேர்வராயன், பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்ராயன்மலை, கூடமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கோடை காலங்களில் வன தீ ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. அடர் வனப்பகுதிகளில் வன தீ ஏற்படாதவாறு கண்காணிக்கும் வகையில் சேலம், ஆத்தூர் வனக்கோட்ட பகுதிகள் 5 டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த புல், சருகுகளை எரிக்க கூடாது. வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் கோடைகாலம் முடியும் வரை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். வன விலங்குகள் கோடைகாலத்தில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் தேடி வருவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி வன பாதுகாவலர் கீர்த்தனா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.