இளைஞர் கொலை வழக்கில் 5 காவலர்கள் கைது
விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த வழக்கில் 5 காவலர்களை போலீசார் கைது செய்தனர்;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பவரை 10 பவுன் நகை திருடியதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவனம் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் நடைபெற்ற உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் அஜித் குமார் 9 இடங்களில் தாக்கப்பட்டதும் குரல்வளையில் காயம் ஏற்பட்டது, உள் உறுப்புகள் சேதம் அடைந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தமிழகத்தில் தொடர்ந்து 24 லாக்கப் டெத் நடைபெற்றதை கண்டித்து நிலையில் . திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் சம்பவம் நடைபெற்ற மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கள ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்து சென்றார். சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜீத்குமார் உயிரிழப்புக்கு காரணமான ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத்திடம் நேரில் ஆஜர் செய்தனர். ஐந்து பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் கிடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.