போகிக்கு குப்பைகளை எரிப்பதைத் தடுக்க 51 வார்டுகளிலும் சேகரிப்பு மையம்

மாநகராட்சி

Update: 2025-01-10 06:29 GMT
தஞ்சாவூர் மாநகரில் போகி பண்டிகைக்காக குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க 51 வார்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை தூய்மை பணியாளர்கள் 188 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் மாநகரில் புகையில்லா போகி - மாசற்ற போகி என்பதை வலியுறுத்தும் விதமாக 51 வார்டுகளிலும் ஜனவரி 11, 12, 13 ஆம் தேதிகளில் தலா ஒரு குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள், துணிகளை எரிப்பதைத் தடுத்து, சேகரிக்கும் விதமாக இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா 2 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுவர். பழைய பொருட்கள், துணிகளை அப்புறப்படுத்த விரும்புவோர் இந்த மையத்தில் கொடுத்தால் போதுமானது.  மேலும், வீடுகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் சென்று சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் சாலை, பொது இடங்களில் குப்பைகளை எரிக்க வேண்டாம்" என்றார் மேயர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News