திருவையாறில் 53 ஆம் ஆண்டு தமிழிசை விழா தொடக்கம்

தமிழிசை விழா

Update: 2025-01-15 11:33 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரி வளாகத்தில் திருவையாறு தமிழிசை மன்றம் சார்பில் 53 ஆவது தமிழிசை விழாவின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழிசை மன்றத் தலைவர் வி. செல்வராசு தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசினர். இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் பேசுகையில், திருவையாறு தமிழிசை மன்றம் ஆண்டுதோறும் நடத்தும் தமிழிசை விழாவுக்கு தமிழக அரசு குறைந்தது ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழிசை மூவர் சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோருக்கு சீர்காழி அல்லது திருவையாறில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்" என்றார்.  பின்னர், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், தமிழிசை மூவருக்கு சீர்காழியில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு விட்டது. திருவையாறு தமிழிசை மன்றத்துக்கு ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற துணை நிற்போம்" என்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.ப.நல்லசிவம் மற்றும் சென்னை சுபஸ்ரீ தணிகாசலத்துக்கு பண்ணிசை அரசு விருதும், எட அன்னவாசல் கோ. ஜெயந்திக்கு யாழிசை இளவரசி விருதும், சிதம்பரம் இராஜேந்திரனுக்கு முகர்சிங் இளவரசு விருதும் வழங்கப்பட்டன. முன்னதாக, மன்றப் பொதுச் செயலர் தி.கு.ரவிச்சந்திரன் வரவேற்றார். நிறைவாக, பொருளாளர் இராம. அசோக்குமார் நன்றி கூறினார். இத்தமிழிசை விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.

Similar News