மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிதி.
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சத்திற்கான காசோலைகள் ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்.;
பரமத்திவேலூர்.ஏப்.12: நாமக்கல் மாவட்டம் -மோகனூர் தாலுகா ஆண்டாபுரம் தெற்குத் தெருவில் வசித்துவந்த இளஞ்சியம் (50) என்பவர் பேரன் சுஜித் (5) மற்றும் பேத்தி ஐவிழி (3) ஆகிய மூன்று பேரும் தங்களது தோட்டத்திற்கு சென்றபோது அன்று இரவு வீசிய பலத்த மழை மற்றும் காற்றினால் மின் கம்பிகள் சேதமடைந்து விவசாய நிலத்தில் இருந்த இரும்புக் கம்பிவேலி மீது விழுந்த நிலையில் அந்த கம்பிவேலியை மூன்று பேரும் தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில். மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர். என்.ராஜேஸ்குமார் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல் அமைச்சர் முதல் அறிவித்தப்படி முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 6. லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராஜேஸ்குமார் எம்.பி.வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் உமா ஆண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் அரசு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.