குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு முதல்வரின் பொதுநிவாரணம் ரூ.6 லட்சம் வழங்கல் ஆட்சியர், எம்பி., வழங்கினர்
குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு முதல்வரின் பொதுநிவாரணம் ரூ.6 லட்சம் வழங்கல் ஆட்சியர், எம்பி., வழங்கினர்;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண உதவியாக ரூ.6 லட்சத்துக்கான காசோலையை நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினர். வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்த கூலித்தொழி்லாளி சுப்பிரமணி என்பவரின் மகன்களான நிஷாந்த் (23), பிரசாந்த் (19) ஆகிய இருவரும் சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பைரோஜி அக்ரஹாரம் பகுதியில் அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் உள்ள மழை நீர் தேங்கிய குட்டையில் நீச்சல் பழகச் செப்.20-ல் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார். இதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்த நிஷாந்த், பிரசாந்த் ஆகியோரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களின் பெற்றோர் சுப்பிரமணி வசந்தா ஆகியோரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.