15 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூர் பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நடந்தது
விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2008 - 2009 ல் அதாவது 15 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூர் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. கடலூர் தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் துணை வட்டாட்சியர் கடலூர் சிவகுமார், தேர்தல் உதவியாளர் ராஜேஷ், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார், மாவட்ட கணினி மேலாளர் சாந்தப்பன், விருத்தாசலம் தேர்தல் துணை வட்டாட்சியர் முருகேஸ்வரி, தேர்தல் பிரிவு கணினி இயக்குனர் சுரேஷ் மற்றும் தேசிய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 1606 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 748, கட்டுபாட்டு கருவிகள் 3 ஈச்சர் லாரிகளில் தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டு பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.