நாகர்கோவில் வாலிபர் கொலை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி பகுதியில் முன்விரோதத்தால் இளைஞரை கொலை சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-04-21 10:33 GMT
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் மகன் ஆகாஷ் (20 ). இவரது நண்பர் சஜித் (20 ) இருவரும் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். சாஸ்திரி நகர் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் ஆகாஷ், சஜித் இருவரையும் வழி மறித்து தகராறு செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சஜித்தை குத்தினார்கள்.

Advertisement

இதை தடுத்த ஆகாஷையும் குத்தி விட்டு, கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவதரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். சஜித்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து இடலாக்குடி பகுதி ஷேக் செய்யதலி என்ற பைசல் (28), சுசீந்திரத்தை சேர்ந்த தில்லைநம்பி (25) உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் தனிப்படை போலீசார் பைசல், தில்லை நம்பி இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News