2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருப்பணி தீவிரம்
காங்கேயம் அருகே 2000 ஆண்டுகள் பழமையான பால் பட்டாளீஸ்வரர் கோவில் திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது
Update: 2024-04-29 08:16 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த அரசம்பாளைத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. கொங்கு நாட்டிற்கு பெருமை சேர்த்த கோவிலாக இருந்த சிவன்மலை பட்டாலி பால் வெண்ணிஸ்வரர் கோவில் கடந்த சில வருடங்களாக சிதிலமடைந்து காணப்பட்டது. சிவன் மலைக்கு நேர் பின்புறம் கிரிவலப் பாதையின் மேற்கே செல்லக்கூடிய அரசம்பாளையம் ரோட்டில் 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் சிவன்மலை உட்பட இந்தப் பகுதி பட்டாலியூர் என அழைக்கப்பட்டது. வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகப்பெருமான் கவர்ந்து வரும் போது தன்னை எதிர்த்த வேடர்களை முருகன் கொன்று விட திருமணத்தின் போது அவர்களை உயிர்ப்பிக்க கோரி வள்ளி முருகனை வேண்டினார். அதைத் தொடர்ந்து போரில் இறந்த வேடர்களை முருகன் எழுப்பியதால் அவர்கள் சந்தோஷத்தில் கூத்தாடி ஒலி எழுப்பிய இடமே இந்த பட்ட ஆலி என்பது நாளடைவில் பட்டாலி என்றானது. 1805 ஆம் ஆண்டு தீரன் சின்னமலை 200 பொன் கொடுத்து இந்த இடத்தை வாங்கி போர் பயிற்சி பாசறை அமைத்ததாக வரலாறு உண்டு. ஒரு காலத்தில் சிறந்த வணிக மையமாகவும் இருந்துள்ளது. மேலும் பாண்டிய நாட்டு பிரான்மலை கல்வெட்டில் இச்செய்திகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. தற்போது கோயில் சன்னதிகள் பூமியில் புதைந்து காணப்படுகிறது. அய்யன் சன்னதியை சுற்றி அம்பாள் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, பைரவர் சன்னதி என அனைத்தும் தனித்தனியாக உள்ளது. சன்னதிகளுக்கு உட்புறம் கல்தூண்கள் இருந்தாலும் சுற்றிலும் செங்கல் சுவர்களாலும் தரைத்தலம் வரைக்கும் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. சுவரை சுற்றிலும் குமுத பத்ம வரிகளில் இடைவிடாமல் காந்தம் கலந்து அக்கால தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் உள்ளது. இதுபோல் 17 கல்வெட்டுக்கள் உள்ளது. இவை அனைத்தும் 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்கு சோழர்களான குலோத்துங்க சோழன், விக்ரமா சோழன், வீர ராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜராஜன் ஆகியோர் ஆட்சிக்கால கல்வெட்டுகள் ஆகும். இந்த அரசர்கள் இந்த கோவிலுக்கு கொடுத்த கொடைகள், சந்தியா தீபம் வைக்ககொடுத்த கொடைகள் , மண்டபம் அமைக்க கொடுத்த கொடைகள், பள்ளியறை நாச்சியார் சிலை அமைத்த கொடைகள் போன்ற விபரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அருணகிரிநாதர் 14ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலுக்கு வந்து சாமிக்கு மூன்று திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். எனவே அருணகிரிநாதருக்கு இங்கு முருகன் காட்சி கொடுத்ததாக தகவல் சொல்கிறது. இந்த நிலையில் கடந்த 13 வருடத்திற்கு முன்பு 2014ம் ஆண்டு கோவிலை புதுப்பிக்க பாலாலயம் நடத்தப்பட்டு தொடர்ந்து பலமுறை தடைபட்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமாரதுறை, துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் சி.சு. பால்ராஜ், காங்கேயம் ஆய்வாளர் செல்வப்ரியா, உபயதாரர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சிவன்மலை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் தலைமையில் பால் பட்டாலி வெண்ணீஸ்வரர் கோவிலில் பழங்கால கல்வெட்டுகள் சுவடுகள் ஆகியவை பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.