2026 ம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் முதல்வர் ஆவது உறுதி!- எருமப்பட்டியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். திமுக ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.;

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் ஏற்பாட்டில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், குமராபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி எம்எல்ஏ பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனை, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக சீர்கேடுகள் குறித்த துண்டு பிரசுரங்களை எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களுக்கு வழங்கி திமுக ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியின் முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவிமோகன், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி. பி ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரத்தின் மூலம் வீடு வீடாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றோம், திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து தேர்தல் நடைபெறும் வரை தெருமுனை பிரச்சாரம் நடத்தப்படும்.பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. அமைச்சர் பொன்மொழியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டணியை தமிழ்நாடு முழுவதும் வரவேற்றுள்ளார்கள். வரும் 2026 ம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது குறித்து அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எம்.பி.கனிமொழி தெரிவித்த கருத்துக்கு.. அவர் பதில் அளிக்கையில் 2026 ம் ஆண்டு தேர்தலில் கனிமொழிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.எடப்பாடி பழனிசாமி 2026 ல் முதல்வர் ஆவது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.