வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி
கன்னியாகுமரியில் நடைப்பெற்ற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மண்டல அலுவலர்களால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியானது இன்று நடந்தது. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு ஆசாரிப்பள்ளம் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நாகர்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு சுங்கான்கடை, செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், பத்னாபபுரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு திருவட்டார், எக்ஸ்சல் சென்ரல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மார்த்தாண்டம், Sacred Heart International பள்ளியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியிலும் அளிக்கப்பட்டது.
தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும் மற்றும் மின்னணு இயந்திரங்களை கையாள்வது எப்படி என்பது குறித்து விளக்கி கூறப்பட்டதோடு, மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டார். இந்த பயிற்சி வகுப்புகளில் அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.