ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஈங்கூர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த வடமாநில நபர் ஒருவர், ஏற்கனவே அங்கிருந்த மற்றொருவரிடம் ஒரு பையை கொடுத்தபோது, அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் ஒடிசா மா நிலத்தை சேர்ந்த சூரஜ்குமார் (35), முகேஷ் டீகல் (31) என்பது தெரியவந்தது. இதில் முகேஷ் டீகல், தான் ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை சூரஜ்குமாரிடம் கொடுத்தபோது பிடிபட்டார். மேலும், போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், முகேஷ் டீகல், அவரது நண்பரான அருண் டீகலுடன் சேர்ந்து, ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து, தாங்கள் தங்கியிருக்கும் ஈங்கூர் உள்ள அறையில் பதுக்கி வைத்து, வட மாநிலத் தொழிலாளர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் முகேஷ் டீகல் தங்கியிருந்த அறைக்குச் சென்று, அங்கி தங்கியிருந்த அருண் டீகலையும் கையும் களவுமாக பிடித்தனர்.இதையடுத்து, அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர். மேலும், அவர்கள் அறையில் பதுக்கி வைத்திருந்த 28 கிலோ கஞ்சா மற்றும் சூரஜ்குமாரிடம் விற்பனை செய்த 5 கிலோ கஞ்சா என மொத்தம் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 33 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.