சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த 3 பேர் கைது
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த 3 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா? என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வுசெய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சிவகாசி அருகே மணியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஒரு பட்டாசு ஆலையில் மாரனேரி விஏஓ ஜெயபால் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் விதிகளை மீறி மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து மாரனேரி போலீசில் விஏஓ ஜெயபால் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த குத்தகைதாரர்கள் திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்த அருண்குமார் ( 29), பாறைப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (29),மேலாளர் ராஜேஸ்வரன் (34) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப் புள்ள முழுமையடையாத பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இந்த விதிமீறல் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர்கள் வேண்டு ராயபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி, ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.