அரிசி கடத்தலில் பிடிபட்ட 34 வாகனங்கள் பொது ஏலத்தில் விட முடிவு
தஞ்சாவூரில் அரிசி கடத்தலில் பிடிபட்ட 34 வாகனங்கள் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது வினியோகத் திட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
"தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், திருவையாறு பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பண்டங்களை, லாப நோக்கத்தில் கடத்தி விற்பனை செய்யப்பட்ட 34 வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வாகனங்களை உரிமை கோரி உரிய ஆவணங்களுடன் எவரும் முன்வராத காரணத்தினால், அரசுக்கு ஆதாயம் செய்து மின்னணு வாயிலாக ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, வாகனங்கள் தங்களுடையது என கருதினால், சம்பந்தப்பட்டவர்கள் வாகனம் உரிமை தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களுடன், அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில், வாகனத்தினை உரிமை கோரும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.