வி.ஐ.டி பல்கலையில் தமிழ் இலக்கிய மன்ற 35ஆம் ஆண்டு தொடக்க விழா

Update: 2023-11-02 12:00 GMT

இலக்கிய மன்ற 35ஆம் ஆண்டு தொடக்க விழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற 35 ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது . விழாவிற்கு தமிழியக்க தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ. விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது; பாரதிதாசனை போல இன்னொரு கவிஞரை பார்க்க முடியாது. நான் 1960 ஆம் ஆண்டு லயோலா கல்லூரியில் மாணவராக இருக்கும் போது அவரை அழைத்து வந்து பேச வைத்துள்ளேன். அவர் நினைத்ததை எழுதுகின்ற கவிஞர். பெண்ணுரிமை பற்றி அதிகமாக எழுதி உள்ளார். உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் இந்தியாவில் தமிழும்,சமஸ்கிருதமும் உள்ளது. பழமை மாறாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான்.

நாம் தமிழோடு வாழ வேண்டும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 67 நாடுகளை சேர்ந்த 87 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என எதுவும் பார்ப்பதில்லை. மாணவர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது; எழுத்தும், பேச்சும் இந்த உலகில் என்ன செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எழுத்தும் பேச்சும் புரட்சியை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டுக்கு விடுதலையை ஏற்படுத்தி தந்துள்ளது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை போல ஒரு கவிஞரை பார்க்க முடியாது. தன்னுடைய இறப்பிற்கு முன்பு பகத்சிங் எழுதிய கடிதம் நாட்டை உலுக்கியது .எழுத்தும் பேச்சும் தான் நம்மை மனிதர்களாக அடையாள படுத்தியது. எழுத்தும், பேச்சும் தான் நமக்கு உணர்வூட்டியது, உயிர் ஊட்டியது. உலகத்தை மாற்றியது எழுத்தும் பேச்சும் தான். எழுத்தும், பேச்சும் இலக்கியத்திற்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் உள்ளது. எழுத்து என்பது ஆவணம், பேச்சு என்பது பகிர்தலாகும்.

கவிதை என்பது உணர்ச்சி மொழி. உரைநடை என்பது அறிவு மொழி. திராவிடம் என்பது எல்லோருக்கும் கல்வி வழங்குவது என்பதுதான். பகையை அன்பால் தான் வெல்ல முடியும்.இதை செய்து காட்டியவர் மார்ட்டின் லூதர் கிங். எழுத்தும் பேச்சும் வன்முறையையும் விதைத்தது. ஆனால் அமைதியை கொண்டு வர வேண்டும்.

ஆயுதங்கள் அற்ற உலகம் வேண்டும். போராட்ட உலகம் தான் நமக்கு பெருமை. இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் புத்தகத்தை வேந்தர் விசுவநாதன் வெளியிட சுப. வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். விழாவில் இலக்கிய மன்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் பேசினர். முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற ஆசிரிய பொறுப்பாளர் வினோத்பாபு வரவேற்றார். முடிவில் மன்ற ஆசிரிய பொறுப்பாளர் மரிய செபாஸ்தியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News