மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 8.46 லட்சம் பேர் பலன்

மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 8.46 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர்.

Update: 2024-05-13 13:44 GMT

மக்களை தேடி மருத்துவம்

மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 8 இலட்சத்து 46 ஆயிரத்து 461 நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் 1 .70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2021-2022-ஆம் ஆண்டில் 2,07,417 நபர்கள், 2022-2023-ஆம் ஆண்டில் 3,08,024 நபர்கள், 2023-2024-ஆம் ஆண்டில் 3,31,020 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் 05.08.2021-அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும். இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர்.

பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் தனது குழு உறுப்பினர்களுடன் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவத் திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த மகத்தான திட்டங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பொதுமக்களிடையே இத்திட்டமானது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

       இத்திட்டத்தின்கீழ், பயனடைந்த மதுரை மாவட்டம், டி.இராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வி.அஜித்தாவின் பெற்றோர்கள் தெரிவிக்கையில்:- பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்ட எங்களுடைய குழந்தையை அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

அங்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வரும். இதனால் எங்களுக்கும், எங்களது குழந்தைக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் எங்களது வீட்டிற்கே வந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துப் பெட்டகத்தையும் அளிக்கின்றனர். எங்களது குழந்தை போல் பாதிக்கப்பட்ட பல ஏழை, எளிய குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையில், 

இதுபோன்ற மகத்தான திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்தின்கீழ், பயனடைந்த மதுரை மாவட்டம், டி.இராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வி.தங்கரமா லட்சும்யின் தந்தை தெரிவிக்கையில்:- எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எனது கணவர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்ட சூழ்நிலையில் இலட்சத்தில் ஒரு நபருக்கு ஏற்படும் பெருமூளை வாத நோயினால் எனது குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வசிக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்கு எனது குழந்தையை ஒரு முறை அழைத்து சென்று வருதற்கு ரூ.1000 வரை செலவாகும். இதனால், வறிய நிலையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் வாரந்தோறும் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டி சூழ்நிலை வரும்.

இச்சூழ்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ள ”மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினால் எங்கள் வீட்டிற்கே வந்து எனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, தேவையான மருந்துகளையும் வழங்கிறார்கள்.

இதனால் எங்களது சிரமம் குறைந்துள்ளது. எனது குழந்தையின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் க்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags:    

Similar News