செங்கப்பள்ளி அருகே திடீரென பற்றி எரிந்த கார்
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கபள்ளி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சித்ராதேவி கால்நடை பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தனது மகன் மற்றும் மகளுடன் கொடுமுடியில் தனது தாயார் வீட்டுக்கு நேற்று காலை சென்று உள்ளனர் அங்கு உறவினர்களை பார்த்த பின்பு சரவணம்பட்டிக்கு காரில் திரும்பி வந்தபோது கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி 800 ரக காரின் முன்பக்க பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர்கள் காரிலிருந்து இறங்கினர். இதனையடுத்து திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் வேகமாக பரவிய தீயின் காரணமாக கார் முழுவதும் எரிந்து கருகி சேதமானது. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி தீயைணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.