இடி தாக்கி பசுமாடு பலி - அதிர்ச்சியில் ஒருவர் மயக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் திருக்கடையூரில் இடிதாக்கி மாடு பலியானது. இடி விழுந்த அதிர்வில் மயக்கமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
பலியான மாடு
கடந்த மே 4ம்தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்மனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், குத்தாலம், மணல்மேடு ஆகிய பல்வேறு இடங்களில் பரவலாக காற்று இடியுடன் மழை பெய்தது.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அபிஷேக கட்டளையைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மனைவி உமா (50) என்பவர் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தபோது திருக்கடையூர் அரசு விதை பண்ணை பகுதியில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த தனது சினை மாட்டை கட்டுவதற்காக சென்று உள்ளார். அப்போது இடி தாக்கி சினை மாடு உயிரிழந்தது. இடி விழுந்த போது ஏற்பட்ட அதிர்வில் உமா வயலிலேயே மயங்கி சரிந்தார். தொடர்ந்து உமாவை அவரது உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.