உத்தரவை மீறி திருத்தணியில் ஆபத்தான நடைபயணம்
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதை தொடர்மழையால் 4ம் தேதி இரவு மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் உடைந்து விழுந்தது. இதனால் கோவில் நிர்வாகம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் மற்றும் மலைப்பாதை சீரமைக்கும் பணிகளை துவங்கியது. முதலில் பேருந்து, கனரக வாகனங்களும் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோ சென்றதால் மண்சரிவு மேலும் அதிகரித்தது. இதையடுத்து, அனைத்து வாகனங்களுக்கும் தடைவிதித்தும், இன்று வரை மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மலைப்பாதையில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து, கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையும் மீறி நேற்று அதிகாலையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தடைசெய்யப்பட்ட மலைப்பாதையில் நடந்து மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிப்பட்டனர். மலைப்பாதை சீரமைக்கும் பணிகள், 40 சதவீதமும் கூட முழுமை அடையாத நேரத்தில் பக்தர்கள் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.