ஆப் செய்யப்படாத வாட்டர் ஹீட்டரால் தீ விபத்து

சேலத்தில் வீட்டில் ‘வாட்டர் ஹீட்டரை’ அணைக்காததால் தீ விபத்து ஏற்பட்டது.மின்தடையை மறந்து வீட்டை பூட்டி சென்றது தீ விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

Update: 2023-12-22 03:08 GMT

தீ விபத்து 

சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் வசிப்பவர் பாத்திமா. இவரது வீட்டில் நேற்று காலையில் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளனர். நேற்று அஸ்தம்பட்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக மின்சார வினியோகம் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இல்லத்தரசி பாத்திமா, வாட்டர் ஹீட்டர் சுவிட்ச்-ஆப் செய்யாமல் வீட்டை பூட்டி விட்டு தொப்பூருக்கு சென்று உள்ளார். மாலையில் மின்சாரம் வந்தவுடன் வீட்டில் இருந்து புகை வரவே அக்கம் பக்கத்தினர், இது குறித்து செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கல்யாண வாசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மின்சாரத்தை நிறுத்தி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் சுவிட்ச் பாக்ஸ், வாட்டர் ஹீட்டர், கதவு ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன.

இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவாக மின்தடை ஏற்படும் காலங்களில் வீட்டை பூட்டி செல்வோர் மின் இணைப்புகள் அணைக்கப்பட்டு உள்ளதா? என்பதை சரிபார்த்து விட்டு கவனமுடன் செயல்பட்டால் இதுபோன்ற தீ விபத்துகள் நிகழாது என்று தீயணைப்பு படையினர் அந்த பகுதி பொதுமக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

Similar News