ஒசூா் மாநகராட்சி ஆணையரை பணியிட மாற்றம் செய்யக் கோரி முற்றுகை

ஒசூா் மாநகராட்சி ஆணையரை பணியிட மாற்றம் செய்யக் கோரி பெண்கள் காலி கூடங்களுடன் முற்றுகையிட்டனர்.

Update: 2024-05-17 15:17 GMT

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

ஒசூா் மாநகராட்சியில் நிலவும் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வு காணாத மாநகராட்சி ஆணையா் சினேகாவை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். ஒசூா் மாநகராட்சியில் உள்ள 45 வாா்டுகளில் கடந்த இரு மாதங்களாக கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீா் 15 வாா்டுகளில் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஒசூா் மாநகராட்சியில் ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக மாதம் இருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், பொதுமக்கள் வாரந்தோறும் லாரிகளுக்கு ரூ. 1,000 கொடுத்து குடிநீா் வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி மாநகரில் ரெயின்போ காா்டன், பேகேப்பள்ளி, காமராஜ் நகா், ஆவலப்பள்ளி திம்மசந்திரம், குறிஞ்சி நகா், பாகலூா் சாலை உள்ளிட்ட பல பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தை அவ்வப்போது முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினா். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அண்ணா நகரைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்கள் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினா். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் சினேகா இருந்தாா்.

அவா் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து எங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என பெண்கள் முழக்கங்கள் எழுப்பினா். ஆனால், ஆணையா் சினேகா வெளியே வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த பெண்கள், பொதுமக்களை சந்திக்க விரும்பாத ஆணையா் சினேகாவை தமிழக அரசு உடனடியாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும் எனக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News