பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!
ராணிப்பேட்டை அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-15 14:39 GMT
ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் யமுனா (16). இவர் புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இதையடுத்து பிளஸ்-1 பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் யமுனா தமிழ் பாடப்பிரிவில் தோல்வியடைந்தார். இதனால் யமுனா மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யமுனா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி யமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.