சிவகாசியில் பள்ளி கூடம் கட்ட இடத்தை தானமாக கொடுத்த ஆசிரியர் குடும்பம்

சிவகாசி அருகே பள்ளி கூட கட்டிடம் கட்ட இடத்தை தானமாக கொடுத்த ஆசிரியர் குடுபத்தை கிராம மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

Update: 2024-03-05 11:46 GMT
பள்ளி கூடம் கட்ட இடத்தை தானமாக கொடுத்த ஆசிரியர் குடும்பம்.

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த ஆசிரியர் குடும்பத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு சுமார் 1 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் எம்.புதுப்பட்டி ஊராட்சியில் போதிய இடம் இல்லாததால் பள்ளிக்கட்டிடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. கட்டிடம் கட்ட இடமின்றி பள்ளிக்கு ஒதுக்கிய நிதியும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த பள்ளி கட்டிடம் கட்ட 2 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளனர் ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பம். எம்.புதுப்பட்டியை பூர்வீகமாக கொண்டு கூடமுடையார் அய்யனார் கோவில் குல தெய்வமாக கும்பிட்டு வரும் குருசாமி வகையறா குடும்பதினர் தற்போது திண்டுக்கல், சென்னை, அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மறைந்த ஆசிரியர் குருசாமியின் மகன் மணிவண்ணன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்படி எம்.புதுப்பட்டி பழைய போலீஸ் ஸ்டேசன் அருகில் மேட்டுப்பட்டி சாலையில் ரூ.30லட்சம் மதிப்பிலான 2ஏக்கர் நிலத்தை எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தனாமான நேற்று எழுதிக்கொடுத்தனர். திருத்தங்கல் பத்திர அலுவலகத்தில் இதற்கான பத்திரபதிவு நேற்று நடைபெற்றது.

பத்திரபதிவின் போது குருசாமியின் மகன் மணிவண்ணன் மற்றும் உறவினர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். பள்ளிக்கு நிலம் வழங்கிய குருசாமி வகையாறா குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியர்கள், எம்.புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News