காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் காதல் மனைவி பிரிந்து சென்ற மன வேதனையில் வாலிபர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் செல்வராஜ் (26). லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரகுமத்ராணி. இவர்கள் இருவரும் 10.10.2019ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளனர்.
இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. செல்வராஜ் அடிக்கடி சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து, சந்தேகப்படுவதாக கூறி, இவரது மனைவி டிசம்பர் மாதம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்து அங்கு இருவரும் பிரிந்து செல்வதாக எழுதிக் கொடுத்து மனைவி மதுரையில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்று இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செல்வராஜ் அவரது மனைவியின் அக்காவிடம் ரகுமத்ராணியை குடும்பம் நடத்த வர சொல்லுங்கள் என்று சண்டையிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தாதர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி - நள்ளி ரயில் நிலையமிடையே வரும் பொழுது ரயில் தண்டவாளபாதையில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.