பூதப்பாண்டி தொழிலாளி கொலையில் திருப்பம் - மகளின் கள்ளக்காதலன் கைது
பூதப்பாண்டி தொழிலாளி கொலையில் மகளின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46) கூலி தொழிலாளி. கடந்த 25 -ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மது போதையில் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ்குமாரை தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் 21 வயதான மூத்த மகள் ஆர்த்தி என்பவர் தந்தையை கம்பால் அடித்து கொன்றதாக தெரிவித்தார். ஆனால் சுரேஷை ஆர்த்தி ஓருவரால் மட்டும் அடித்து கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதி சுரேஷ் பாபு (47) என்ற திருமணம் ஆன ஒருவரும் சம்பவ இடத்தில் இருந்தது தெரிய வந்தது. இவர் கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாரின் நண்பர் ஆவார். சுரேஷ்குமாரை பார்க்க அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று, அங்கேயே கூடி இருந்து மது குடிப்பது வழக்கம். அப்போது ஆர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மது கொடுத்து ஆர்த்தியின் தந்தையை மயக்கி கிடத்தி விட்டு, இருவரும் கள்ள உறவு கொண்டிருந்தனர். சம்பவ தினம் மது போதையில் சுரேஷ்குமார் சரிந்த உடன் ஆர்த்தியும் சுரேஷ் பாபுவும் கள்ள உறவில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சுரேஷ்குமார் விழித்ததால் தகராறு ஏற்பட்டதில், சுரேஷ் பாபு கட்டையால் சுரேஷ்குமார் தலையில் அடித்ததில் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் சுரேஷ் பாபுவை கைது செய்தனர். தொடர் விசாரணையில் சுரேஷ் பாபு ஏற்கனவே 3 திருமணம் செய்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும் கொலை நடந்த உடன் ஆர்த்தியிடம் இந்த கொலையை ஆர்த்தி செய்ததாக ஒப்புக் கொண்டால், ஜாமீனில் வெளியே கொண்டு வந்து உடனே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பியதால் ஆர்த்தி போலீசாரிடம் தான் தந்தையை கொன்றதாக முதலில் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என தெரிய வந்துள்ளது.