கடையம் அருகே விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்தவர் சுரேஷ்,விவசாயி. இவரது மகள் சித்ரா(17). இவர் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சித்ரா தனது பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்கைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.