மாநகரில் வேகமாக செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை !
மாநகரில் வேகமாக செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை
By : King 24x7 Angel
Update: 2024-07-09 07:23 GMT
சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிருந்தா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டம், ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் புதிய, பழைய பஸ் நிலையங்களில் தற்காலிக கடைகள் அனுமதியின்றி நடத்தப்படுவதாகவும் இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி உதவி ஆணையர், போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சேலம் பழைய பஸ் நிலைய தரை தளத்தில் இருந்து பஸ்கள் வெளியில் வரும் இடத்தில் அதிகம் ஆட்டோக்களை நிறுத்திக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வாகன நிறுத்துமிடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. இதையொட்டி திருடர்களை கண்டுபிடிக்க அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தேவையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்களை அமர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகரில் அதிவேகமாக செல்லும் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, போலீஸ் துணை கமிஷனர்கள் பிருந்தா, மதிவாணன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.