அப்பர் சதய விழா தொடக்கம்  

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-வது ஆண்டு அப்பர் சதய விழா தொடக்கவிழா நடைபெற்றது.  

Update: 2024-05-03 13:32 GMT

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் 96-ஆவது ஆண்டாக அப்பர் சதய விழா வெள்ளிக்கிழமை தொங்கியது. தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சமயக் குறவரான அப்பர் சுவாமிக்கு மடம் அமைத்து, அவரது பிறந்தநாளை கிராம மக்கள் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டு அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில், மின்கம்பி தேர்மீது உரசியதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு பிறகு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தமிழம் முழுவதும் திருவிழா நடத்தும்போது கடைபிடிக்க உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விபத்து நிகழ்ந்த பின்னர் கடந்தாண்டு, 11 பேர் இறந்த சுவட்டின் தாக்கம் இருந்ததால், களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதயவிழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பிலும் அப்பர் பேரவை சார்பிலும் 96 -ஆவது ஆண்டாக அப்பர் சதயவிழாவினை வெள்ளிக்கிழமை தொடங்கி, மூன்று நாட்களுக்கு கொண்டாடுகின்றனர். அதன்படி களிமேடு அப்பர் மடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. 

பின்னர் திருமுறை இசையும், 11 மணிக்கு அப்பர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில், சென்னை குன்றத்தூர் எம்.கே.பிரபாகரமூர்த்தியின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அப்பர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சனிக்கிழமை (4 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டியும், இரவு 7.30 மணிக்கு அப்பர் பெருமான் வழிபாடும், தஞ்சாவூர் வைதேகி ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மே 5-ம் தேதி) அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News