18 இடங்களில் தானியங்கி மழைமானிகள் - மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலநிலை மற்றும் மழையின் அளவை துல்லியமாக கண்காணித்து கணக்கிடும் வகையில் 18 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவினை துல்லியமாக கண்காணிக்கவும், கணக்கிடவும் 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் சிறுவாச்சூர், அம்மாபளையம், மேலப்புலியூர், கீழக்கரை, வாலிகண்டபுரம், வி.களத்தூர், பசும்பலூர், நூத்தப்பூர், பூலாம்பாடி, பேரளி, அசூர், ஓலைப்பாடி, துங்கபுரம், கிழுமத்தூர், கண்ணப்பாடி, பாடலூர், கூத்தூர் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய 18 கிராமங்களிலும், தானியங்கி வானிலை நிலையங்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் ஆலத்தூர் ஆகிய 03 வட்டங்களிலும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் முடிவுற்ற பின்னர் புதிய தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11 இடங்களில் மழைமானிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.