சேலம் மார்க்கெட்டில் பீன்ஸ் ரூ.135-க்கு விற்பனை
சேலத்தில் வரத்து குறைவால் பீன்ஸ் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.135 க்கு விற்பனையானது.
Update: 2024-04-12 03:45 GMT
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரட், பீட்ரூட், இஞ்சி, பீன்ஸ், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பீன்ஸ் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.90 வரை விற்கப்பட்ட பீன்ஸ் நேற்று ரூ.120 முதல் ரூ.128 வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் பீன்ஸ் கிலோ ரூ.135 வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீன்சை குறைந்தளவே வாங்கி சென்றனர்.