கருணாநிதிக்கு சிலை வைக்க பா.ஜ.க எதிர்ப்பு
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வழக்கறிஞர் பிரிவினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
தமிழக பா.ஜனதா வக்கீல் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் பா.ஜனதா வக்கீல்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகில் விதிமுறைகளுக்கு புறம்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படுகிறது. அந்த இடத்தில் சிலை வைக்க உரிய விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏராளமான இடங்களில் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கல்வெட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பா.ஜனதா கட்சியினர் கொடிக்கம்பங்கள் வைத்தால் அவற்றை போலீசார் அகற்றிவிடுவதுடன், வழக்குப்பதிவும் செய்கிறார்கள். கருணாநிதி சிலை வைக்கும் இடம் பஸ்நிறுத்தம் என்பதாலும், எதிர்காலத்தில் பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நிகழ்ச்சியின்போது அங்கு ஏராளமானோர் திரள்வார்கள் என்பதாலும் பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவ – மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படும். எனவே, அங்கு சிலை வைக்க அனுமதிக்க கூடாது என கூறப்பட்டிருந்தது.