தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சியினர் கதறுகிறார்கள் - கே.பி.ராமலிங்கம்
சேலத்தில் பிஜேபி மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி.
Update: 2024-04-26 07:24 GMT
சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவரும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடி அலை வீசியதை காணமுடிந்தது. குறிப்பாக படித்த இளைஞர்கள், பெண்கள் அனைவரும் பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தான் மோடி பேசினார். ஆனால் அது என்னவென்று தெரியாமலேயே எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அது அவரது அறியாமையின் வெளிப்பாடு.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சொத்தை பிரித்து சிறுபான்மையினருக்கு கொடுப்பதாக தெரிவித்து உள்ளனர். இது எப்படி சாத்தியம் ஆகும்? இந்தியாவில் வசிக்கும் நபர்கள் அவர்களது பாட்டன், முப்பாட்டன் சொத்தை அனுபவித்து வருகின்றனர். அதை எப்படி பிரித்து கொடுக்க முடியும்?. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை?. தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சியினர் எதையோ கூறி கதறுகிறார்கள். நடந்து முடிந்த முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் உள்பட 80 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.