பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
புகலூர் அருகே காட்டுமுன்னூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ.1.36 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-02-15 04:53 GMT
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, புகலூர் தாலுகா, காட்டுமுன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் வயது 31. இவர் மதியம் 12 மணியளவில், அவரது தோட்டத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். தோட்டத்து பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஒரு மணி அளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 3/4 பவுன் தங்க நகை, ஒரு சில்வர் கொலுசு, ரூபாய் 7000- கொள்ளை போனது கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து க.பரமத்தி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சில தடயங்கள் கிடைக்கப்பெற்றதை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, பட்டபகலில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.