கால்வாய் துார் வார கோரிக்கை
விருகம்பாக்கம் கால்வாயை உண்மையான ஆழம் அளவிற்கு துார் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
By : King 24x7 Website
Update: 2023-12-23 17:35 GMT
வளசரவாக்கம் மண்டலம் நெற்குன்றத்தில், விருகம்பாக்கம் கால்வாய் துவங்குகிறது. நெற்குன்றம், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இந்த கால்வாயில் வெளியேறி வருகிறது. இந்த கால்வாய் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், மேத்தா நகர் வழியாக, நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது. பொதுப்பணி துறை பராமரிப்பில் உள்ள இக்கால்வாய், இந்நாள் வரை அதன் உண்மையான ஆழம் அளவிற்கு துார் வாரப்படவில்லை. சமீபத்தில் மழைக்காலத்தை ஒட்டி, விருகம்பாக்கம் கால்வாயில் இருந்த குப்பை மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, மேல்மட்டத்தில் மட்டுமே கழிவுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், 'மிக்ஜாம்' புயலின் போது, மழைநீரால் கால்வாய் நிரம்பி வழிந்தது. இதனால் விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்வாயில் இணைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்க்கு செல்லாமல், நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தற்போது, மழை முடிந்த நிலையில், மீண்டும் கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்துள்ளன. அடுத்தாண்டும் இதுபோன்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க, விருகம்பாக்கம் கால்வாயை, அதன் உண்மையான ஆழம் அளவிற்கு துார் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.