ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் விவகாரம்; விளக்கம் அளித்த சென்னை காவல்துறை!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை காவல்துறை, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர். வாகனத்தை நிறுத்தியபோது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார். உடனடியாக பாதுகாவலராக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். M3 புழல் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.