சரிந்த நிலத்தடி நீர்மட்டம் - குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த நான்கு மாதங்களில், 4.9 அடி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த நான்கு மாதங்களில், 4.9 அடி நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே 1.4 அடி குறைந்துள்ளது. இதன் காரணமாக, கோடை வெயிலால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதமே வெயில் அதிகமாக இருந்ததால், நீர்நிலைகளில் கையிருப்பில் உள்ள தண்ணீர், வேகமாக வற்றி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்ஆதாரத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், குளம், குட்டைகள் 2,000 எண்ணிக்கையில் உள்ளன. இதில் உள்ள தண்ணீரை நம்பியே நெல், கரும்பு உள்ளிட்டவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், வெயில் காரணமாக தண்ணீர் வற்றுவதால், விவசாயிகளும் கவலையடைகின்றனர். நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், 220 ஏரிகளில், 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளன. உத்திரமேரூர் பெரிய ஏரியில் மட்டுமே, 75 சதவீத தண்ணீர் உள்ளது.