அனைத்து ஊராட்சிகளிலும் இணைதள வசதி அறை - சேதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை
இணையதள வசதி வழங்க அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் கண்ணாடி இழைகளை சேதப்படுத்தக் கூடாது ஆட்சியர் எச்சரிக்கை;
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் 59 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது.
இத்திட்டத்திற்கான Rack/UPS உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும். இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், POP பொறுத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார்.
கண்ணாடி இழை 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக் கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது. மேலும் விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழயாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
கண்ணாடி இழையில் எந்த விதமான உலோக பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம் எனவும் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெறமுடியும். ஒவ்வொரு கிராம ஊரட்சிகளிலும் POP மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், UPS, Router, Rack மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடமைகளாகும். உபகரணங்கள் சேதப்படுத்தும் அல்லது திருடும் கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.