புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம்- எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தை எம்.எல்.ஏ ராஜா துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குருக்கள்பட்டியில் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கிணறுகளில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல தனியாக 16 கே.வி. மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணை தலைவர் வேலுச்சாமி, சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கிணற்றில் இருந்து ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தொடங்கி வைத்தார். இதில் கிளை செயலாளர் சுகுமாரன், பாலசுப்பி ரமணியன், மின் வாரிய உதவிசெயற்பொறியாளர் ரவி ராமதாஸ், உதவி பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.