விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்த்த மாநகராட்சி ஆணையர்
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் விபத்தில் காயமடைந்த வாலிபரை மீட்ட தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அவரை தனது வாகனத்திலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
தஞ்சை மருத்துவக் கல்லுாரி சாலையில் எடக்குடியை சேர்ந்த ரஞ்சித் (28) என்பவர் பைக்கில் வந்தார். இவரது வாகனம் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தார். அப்போது ஆய்வு மேற்கொள்ள அந்த வழியாக சென்ற தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விபத்து நடந்ததை கண்டு தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தார். விபத்தில் ரஞ்சித் படுகாயம் அடைந்ததை அறிந்தார்.
உடனே தனது வாகனத்தில் படுகாயமடைந்த ரஞ்சித்தை ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென் றார். ரஞ்சித்திற்கு தலை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஞ்சித் தற்போது நலமுடன் உள்ளார். காலதாமதம் ஏற்படாமல் உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்கும் வகையில் தனது வாகனத்திலேயே அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் மனித நேயமிக்க செயலை பொது மக்கள் பாராட்டினர்.