போலி நகை விவகாரம் : வங்கி முற்றுகை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை போலி நகை எனக் கூறி வாடிக்கையாளரை காக்க வைத்த வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பணத்தேவைக்காக மணிமேகலை தனித்தனியாக மூன்று கணக்கில் 13 பவுன் நகைகளை ரூ.3.88 லட்சத்திற்கு வங்கியில் அடகு வைத்துள்ளார். மேலும் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பாமல் ஒவ்வொரு வருடமும் நகைகளை புதுப்பித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரெகுலராக வரும் வங்கி வாடிக்கையாளரிடம் கூட்டு சேர்ந்து நகை மதிப்பீட்டாளர் ஈஸ்வரன் வாடிக்கையாளர்களின் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வங்கியில் உள்ள மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு நகை மதிப்பீட்டாளர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் நேற்று தணிக்கை (ஆடிட்டிங் ) பணிகள் நடைபெற்றது.இது குறித்து மணிமேகலை உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மணிமேகமையின் உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு.சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வங்கியை முற்றுகையிட்ட மணிமேகலை உறவினர்களுடன் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து மணிமேகலை மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வங்கி நகை மதிப்பீட்டாளார் போலி நகைகளை வைத்துள்ளாரா என விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகையை புதுப்பிக்கவும் மேற்கொண்டு பணம் பெறவும் மணிமேகலை வங்கிக்கு சென்றுள்ளார்.அவரது நகைகளை சோதனை செய்த போது அதில் 9 பவுன் நகைகள் போலி நகை எனவும் பணத்தைக் கட்டி நகைகளை திருப்பிக் கொள்ளுங்கள் என வங்கி அலுவலர்கள் கூறி வங்கியில் மணி மேகலையை 3 மணி நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது.