ஓட்டு சாவடி மையமான பள்ளியில் வண்ணங்களால் அலங்கரிப்பு

தேவனேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாதிரி ஓட்டுச்சாவடியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது.

Update: 2024-04-18 07:44 GMT

தேவனேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாதிரி ஓட்டுச்சாவடியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது.


லோக்சபா தேர்தல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு, தமிழகத்தில் நாளை நடக்கிறது. தேர்தலில், வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில், சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு மாதிரி ஓட்டுச்சாவடி மற்றும் ஒரு பெண்கள் ஓட்டுச்சாவடி ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்போரூர் சட்டசபை தொகுதியில், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாதிரி ஓட்டுச்சாவடியாக தேர்வு செய்யப்பட்டது. தேர்தல் பார்வையாளர், அலுவலர்கள் பார்வையிட்டு, மாதிரி ஓட்டுச்சாவடியாக செயல்பட அனுமதித்தனர். இதையடுத்து, வகுப்பறை கட்டடத்திற்கு, கருநீலம், சந்தன வெண்மை நிறம், கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றுக்கு சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்கள் புதிதாக தீட்டப்பட்டன.

கூடுதல் மின் விளக்குகள், மின் விசிறிகள் அமைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்க சாய்வுதளம் அமைக்கப்பட்டது.தேர்தல் நாளில், நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டி, நடைபாதையில் கம்பளம் விரித்து, வண்ண பலுான்கள், காகித தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோன்று, பெண் வாக்காளர்கள் மட்டும் உள்ள திருப்போரூர் வட்டாரம், ஒரத்துார் துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, பர்பிள் வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்படுகிறது. இங்கு அனைத்து அலுவலர்கள், போலீசார் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News