ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுமார் 1200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2024-03-09 01:38 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டி ஊராட்சி, களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான சிற்பங்கள் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆய்வு செய்தனர். இங்கு 1,200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள் போன்றவை சிதறிக் கிடக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளதாகவும், கி.பி.9-ம் நூற்றாண்டில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதாகவும் ராஜகுரு தெரிவிக்கிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News