அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்படும் திமுக பெண் கவுன்சிலர் தலைமறைவு !

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்படும் திமுக பெண் கவுன்சிலர் தலைமறைவு ஆகியுள்ளார்.

Update: 2024-07-08 07:25 GMT

திமுக பெண் கவுன்சிலர் 

சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர், கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். ஏற்கனவே, 2 முறை கொண்டலாம்பட்டி மண்டலக்குழு தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி இரவு தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சண்முகத்தை வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும், சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிவந்துள்ளது. அதாவது, அன்னதானப்பட்டி போலீசார் மொத்தம் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் சதீஷ்குமார் உள்பட 10 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இதனிடையே, சண்முகம் கொலையில் 55-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அஜீத் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் 4 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அதேநேரத்தில் போலீசாரின் இன்னொரு தனிப்படை ஊட்டிக்கும் விரைந்துள்ளது.

Tags:    

Similar News