காஞ்சி காமகோடி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை
சென்னை 'ஆப்டஸ் வேல்யூ' வீட்டுவசதி நிதி நிறுவனம் சார்பில் காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு, 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், 'ஆப்டஸ் வேல்யூ' வீட்டுவசதி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் செயல் தலைவர் எம்.ஆனந்தன், நிர்வாக இயக்குனர் பி.பாலாஜி, துணைத் தலைவர் என்.ஸ்ரீகாந்த் ஆகியோர், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நேற்று வந்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம், காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு, 1 கோடி ரூபாய் நன்கொடையை காசோலையாக நேற்று வழங்கினர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், காசோலையை பெற்றுக் கொண்டார். இத்தொகையானது காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை செய்து வரும் கல்வி, மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டு சேவைகளை மேலும் சிறப்பாக செய்வதற்காக, நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் எம்.ஆனந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் உடனிருந்தார். முன்னதாக இக்குழுவினர், சங்கர மடத்தில் உள்ள மஹா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வழிபட்டனர்."