சேலம் டவுன் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு
சேலம் டவுன் பகுதியில் நடந்து சென்று கடைக்காரர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 7 மணியளவில் சேலம் டவுன் சின்னகடை வீதி அருகே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ்சுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார். அந்தப் பகுதியில் உள்ள பூ வியாபாரம் செய்யும் பெண்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து பூக்கடை பழக்கடை மற்றும் காய்கறி கடைக்காரர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். சேலம் சின்ன கடை வீதி மற்றும் பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதி வழியே நடந்து சென்று அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பெரிய கடை வீதியில் அதிமுக பொது செயலாளர் பெண் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி விலை விவரம் குறித்தும் ,வேறு என்ன குறைகள் உள்ளது என்றும் கேட்டு அறிந்தார்.
அப்போது காய்கறி பெண் வியாபாரி ஒருவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மற்றொரு பெண் வியாபாரி திராட்சை பழத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களிடமும், கடைக்காரர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.