விளை நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் கட்டுப்பாட்டில், 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், பெரும்பாலும் விவசாய நிலங்களாகவும், அரசு ஆவணங்களில் அனாதீனம் எனும் அரசு நிலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, இந்நிலங்களுக்கான பத்திரங்களை தாங்கள் தொடர்ந்து வைத்திருப்பதாகவும், விவசாய நிலங்களில் பயிரிட்டு வருவதால், பட்டா வழங்க வேண்டும் என, 20 ஆண்டுகளுக்கு மேலாக, கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்டா வழங்காததால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர். அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலரிடம், தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க, விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். ஆனால், கிராம நிர்வாக அலுவலர், வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளாத காரணத்தால், அருகில் உள்ள செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலையில், 100க்கும் மேற்பட்டோர் திடீரென அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால், இரு புறங்களிலும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசைகட்டி நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். கோட்டாட்சியர் மணிமேகலை, விவசாயிகளிடம் மொபைல்போன் மூலம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, மறியலை அவர்கள் கைவிட்டனர்.