ராமநாதபுரத்தில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து: போலீசார் விசாரணை

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தந்தை மகனை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-15 16:16 GMT

கத்தி குத்தில் காயமடைந்தவர்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பள்ளிவாசல் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தந்தை மகன் இருவரையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் அடுத்த சக்கரக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாரூக். இவரது மகன் முகமது தமீன். இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வரும் நிலையில் ரமலான் நோன்பை ஒட்டி கடந்த வாரம் மலேசியாவில் இருந்து சொந்த ஊரான சக்கரக்கோட்டை வந்து அவர்கள் வீட்டில் தங்கி உள்ளனர்.இந்நிலையில் இன்று மாலை இருவரும் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தந்தை மகன் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் முகமது பாரூக் என்பவருக்கு கழுத்து மற்றும் உடல் முழுவதும் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது மகன் முகமது தமீம் என்பவருக்கு இரண்டு கைகளிலும் வெட்டுக் காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்தனர்.இருவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை போலீசார் வீட்டுக்குள் கிடந்த கத்தியை கைப்பற்றியதுடன்,

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.தந்தை மகன் இருவரையும் இடப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர்களது உறவினர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்களா? அல்லது வெளிநாட்டில் இருக்கும் போது ஏற்பட்ட தொழில் பிரச்சனை காரணமாக இந்த கத்தி குத்து நடந்ததா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News