மதுராந்தகம் சாலையில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்: பொதுமக்கள் அவதி

மதுராந்தகம் சாலையில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர்.

Update: 2024-05-27 15:00 GMT

சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தின் பின்புறம், வடக்கு பைபாஸ் சாலையில், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, அப்பகுதிவாசிகள் கொட்டி வருகின்றனர். மதுராந்தகம் பகுதி தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு பைபாஸ், திண்டிவனம் மார்க்கத்தில்,

ஹோட்டல் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் போன்றவற்றை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பை கழிவுகளை சிலர், இரவு நேரத்தில் தீயிட்டு எரித்து விடுகின்றனர். பின், மீண்டும் அதே பகுதியில் குப்பையை கொட்டி வருகின்றனர்.

இதனால், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணியர் கண் எரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். மேலும், கட்டடக் கழிவுகளை சாலை ஓரம் கொட்டி வருகின்றனர்.இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, குப்பை அகற்றப்படாமல், அதே பகுதியில் சமன் செய்யப்பட்டன. தற்போது, மீண்டும் அதே பகுதியில், கட்டடக்கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகளை, அப்பகுதியினர் கொட்டி வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை, தரம் பிரிக்கவும், மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டாதவாறு, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News