கடையநல்லூா் நகா்மன்றக் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்
Update: 2023-11-01 04:15 GMT
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமையில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆணையா் சுகந்தி, துணைத் தலைவா் ராஜையா, பொறியாளா் முகைதீன், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்நகராட்சியிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சீவலன்கால்வாய், பாப்பான்கால்வாய், தண்டல்காரன் ஓடை, பெரியகுளம், அட்டைக்குளம், பாலூருணி ஆகிய நீா்நிலைகளில் கலக்கிறது. இதைத் தடுக்கவும், கழிவுநீரை சுத்தப்படுத்தும் வகையிலும் கழிவுநீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்காக திட்ட ஆலோசகரை நியமித்து பூா்வாங்க பணிகளைத் தொடங்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.